Saturday, November 4, 2023

பாடசாலையின் வரலாறு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கிரான் மத்திய கல்லூரி அமைந்துள்ளது. இது கல்குடா கல்வி வலயத்திலுள்ள முன்னோடிப் பாடசாலைகளுள் ஒன்றாகும். 

.கிராம முன்னோடிகளின் முயற்சியினால் இக்கல்லூரி 03.11.1945 இல்  கிரான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் பெயரில் நிறுவப்பட்டது. இதன் முதலாவது தலைமையாசிரியராக திரு. வீராச்சாமி சுப்பிரமணியம் அவர்கள் நியமிக்கப்பட்டார். 

ஆரம்பத்தில் கிடுகு கொட்டகையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை படிப்படியாக வளர்ச்சியடைந்து மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு தேவையான பௌதீக மற்றும் மனிதவளங்களை மேம்படுத்திக்கொண்டு பின்னர் 1952 இல் க.பொ.த. சாதாரண தரம் வரை தரமுயர்த்தப்பட்டது. பின்னர் பாடசாலையின் பெயர் கிரான் மகா வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

தொடர்ந்து சாதாரண தரப்பரீட்சையின் பின்னர் உயர்தர கற்கைக்காக பல மாணவர்கள் வெளிப்பிரதேச பாடசாலைகளுக்கு செல்லவேண்டியிருந்தது. இது இம் மாணவர்களின் கற்றலில் பலவிதமான இடர்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது இதனை சீர்செய்யும் வகையி;ல் அதிபர் திரு. எம்.பிசாத் அவர்களின் பெரும்முயற்சியினால் 1987 இல் க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதல் தடவையே இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தேர்வானதுடன் ஒருவர் கல்வியியல் கல்லூரிக்கும் தேர்வானது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 1996 இல் க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 

2012 ஆம் ஆண்டில் 1000 பாடசாலைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கல்லூரி உள்வாங்கப்பட்டது இது கல்லூரிக்கு தேவையான பல பௌதீக வளங்களையும் மனித வளங்களையும் உள்ளீர்ப்தற்கு மிகவும் ஏதுவாக அமைந்ததுடன் கல்லூரியின் வளர்ச்சிப்போக்கில் ஒரு மைல்கல்லாகவே கருதமுடியும். 

தொடர்ந்து 2013 க.பொ.த உயர்தரத்தில் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்பட்டது இது எமது மாணவர்களின் உயர்தர கற்கையில் அவர்களின் கற்றல் தேர்விற்கான வாய்ப்பை மேலும் விரிவுபடுத்தியது.
2016 ஆம் ஆண்டில் மீண்டும் கிரான் மத்திய கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக மூன்று மாணவர்கள் 9 பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்று சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. 

2017 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டது இதன்போது முதல் தடவையில் 2 மாணவர்கள் பொறியியல் துறைக்கும் ஒரு மாணவி சித்த மருத்துவ துறைக்கும் இரண்டு மாணவிகள் உயிரியல் விஞ்ஞானத்துறைக்கும் தேர்வுசெய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2017 ஆம் ஆண்டில் 13 ஆம் ஆண்டு உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வித் திட்டத்திற்காக கல்குடா கல்வி வலயத்தில் கிரான் மத்திய கல்லூரியும் தேர்வுசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

2021 ஆம் ஆண்டில் கிரான் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை செயல்திட்டத்தின் கீழ்  உள்வாங்கப்பட்டு தற்போது தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி 1100 மாணவர்களையும் 60 கல்விசார் ஊழியர்களையும் 4 கல்வி சாரா ஊழியர்களையும் கொண்டுள்ளது. தற்போது கல்லூரியின் அதிபராக திரு.மாணிக்கம் தவராஜா அவர்கள் கடமையாற்றுகின்றார்.


Share:

0 comments:

Post a Comment

Blog Archive

MEDIA GALLERY

Categories

Contact Form

Name

Email *

Message *